கொங்கு நாட்டு காந்தி கே.வி.கே. ஐயாவின் அவர்களின் வாழ்க்கை சிறப்புக்கள்

எண்ணம், சொல், செயல் மூன்றும் இணைந்த மனிதர்களே வையத்தில் வாழ்வாங்கு வாழ இயலும். இவ்வழியே தன்னலமற்ற தியகத்தையும், அறவழியைப் பின்பற்றியும் எளிமையாகத் தொண்டாற்றியும் மக்கள் உள்ளத்தில் இடம் பெற்றவர் ‘கே.வி.கே.ஐயா’ என்று அழைக்கப்பட்ட கோப்பம்பாளையம் திரு.கே.வி.காளியப்ப கவுண்டர் அவர்கள் ஆவார்.

இந்தியாவின் முன்னேற்றம் என்பது கிராமங்களின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டது என்கிற காந்தியடிகளின் கருத்தை ஏற்று, அவரோடு இணைந்து நாட்டு விடுதலைக்காக உழைத்தும், சுதந்திரம் பெற்ற பின்னர் காங்கிரஸ் இயக்கத்தில் காமராசரின் கல்விப்பணியில் தன்னுடைய முயற்சியையும், செல்வத்தையும் ஈந்து நீங்காத புகழைத் தேடிக் கொண்டவர் திரு.கே.வி.கே.ஐயா ஆவார். அவர்தம் வாழ்க்கைப் பாதையில் தடம் பதித்துச் சென்ற சிறப்புக்களை நினைவு கூர்வது, வருங்கால இளைஞர்களுக்கு எழுச்சியையும், நாட்டிற்குத் தொண்டாற்றிட ஊக்கத்தையும், வழிகாட்டுதல்களையும் நல்கும் என்று கருதுகிறோம்.

தோற்றம்

கோப்பம்பாளையம் தம்பி என்று பொதுமக்களால் ஒருமித்த அன்புடன் அழைக்கப்பட்ட தியாகச் செம்மல் 1910 –ஆம் ஆண்டு சனவரித் திங்கள் பெருமைமிகு வெங்கடாசலக்கவுண்டர் அவர்களுக்கும் பாசமிகு தாயம்மாள் அவர்களுக்கும் மகனாகப் பிறந்தார்.

அண்ணாரின் தொண்டுள்ளம்

அண்ணல் காந்தியடிகளின் வழியில் காங்கிரஸ் பேரியக்கத்தில் நாட்டு விடுதலைக்காக உழைத்தும், காந்தியடிகளின் கிராம வளர்ச்சித் திட்டங்களில் முனைப்போடு தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். தனது இளமைப்பருவம் தொட்டே பொதுப்பணிகளில் கவனம் செலுத்தியுள்ளார்.ஆழ்ந்த இறைபக்பியும், சேவை மனப்பான்மையும், ஏழை-எளியவர்பால் மிகுந்த ஈடுபாடு உடையவராயும் திகழ்ந்தார்.

விருந்தோம்பல் பண்பு சமுதாய, பொருளாதார வேறுபாடுகள் இன்றி அனைத்துப் பிரிவு மக்களின் இல்ல நல்விழாக்களிலும் அன்புடன் கலந்து அவர்களின் மனம் நிறைவு பெறுவது கண்டு மகிழும் இயல்பினர்.அவ்வண்ணமே வீடுதேடிச் சென்றவர்களிடம் கனிவுடன் அவர்தம் பிரச்சனையை ஆய்ந்து அதற்கான தீர்வைக் கூறுவதுடன் அவர்களுக்கு விருந்து அளித்தும் தாம் இனுபுறுவார். பொதுக் காரியங்கள் தொடர்பாக, தனிநபர் சிக்கல்கள் குறித்தும் அன்னாரிடத்துச் சென்றவர்கள் மனநிறைவு பெற்றுத் திரும்புதல் இயல்பாக நடைபெற்று வந்தது.

ஐயா அவர்களின் செயல்திறன்

எடுத்துக்கொண்ட பணிகளில் தடைகள் பல வந்துநின்ற போதும் கலங்காது உறுதியான மனப்பாங்குடன் ஒரே குறிக்கோளுடன் நின்று செயல்படுத்திய பெருமகனார் கே.வி.கே. ஐயா ஆவார். ஒரு முறை பாதை போடுவதற்காக 16 முறை அந்நிலச் சொந்தக்காரரை அணுகி, பட்டா நிலத்திற்குள் ஒரு மைல் நீளத்தில் புதிய பாதை அமைத்திடச் சம்மதிக்க வைத்தார். நாடு விடுதலைக்குப்பின் காமராசரின் அன்புத்தொண்டராகக் கல்விப் பணியைக் கிராம மக்களுக்கு அளிப்பதில் தீவிரம் காட்டி நிலக்கொடை மற்றும் பொருட்கொடை வழங்கித் தொடக்கக் கல்வி மற்றும் உயர்நிலைக் கல்வி வளர்ச்சிக்கு அடிகோலினார்.

கே.வி.கே.ஐயா வகித்திட்ட பொதுப்பதவிகள்

1. கோபி கூட்டுறவு விற்பனைச் சங்கத் தலைவர் 1944 முதல் 1960 வரை 2.கோபி நிலவள வங்கி இயக்குனர் 1946 முதல் 1961 வரை 3.மாவட்ட வளர்ச்சிக்குழு உறுப்பினர் 1947 முதல் 1961 வரை 4.கே.வி.கே.அரசு மேல்நிலைப்பள்ளி கட்டடக்குழுத் தலைவர் 1953 முதல் 1970 வரை 5.நம்பியூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் மற்றும் காவிலிபாளையம் ஊராட்சித் தலைவர் 1961 முதல் 1970 வரை.

மனமுவந்து அளித்த நன்கொடை விபரம்

1.கே.வி.கே. அரசு மேனிலைப்பள்ளிக்கு இடம் : 4.32 ஏக்கர் 2.கே.வி.கே. அரசு மேனிலைப்பள்ளிக்குக் கட்டடம் கட்ட : ரூ. 2.5 இலட்சம். 3.காவிலிபாளையம் அரசுயர்பள்ளிக்கு இடம் : 4.50 ஏக்கர். 4.காவிலிபாளையம் அரசுயர்பள்ளிக்குக் கட்டடம் கட்ட : ஒரு இலட்சம். 5.கோப்பம்பாளையம் தொடக்கப்பள்ளிக்கு இடம் : 40 சென்ட். 6.அரிசனக்காலனி, இடம் மற்றும் வீடு

எளிமை, தூய்மை, நேர்மை, சத்தியம் ஆகிய பண்புகளுடன் இருந்த ஐயா அவர்களை இப்பகுதிவாழ் மக்களிடம் காந்தியாகவும், காமராசராகவும் நினைக்கும்படி இவருடைய செயல்பாடுகள் அமைந்திருந்தன. அரிசனங்களிடம் இயல்பாகவே கருணை கொண்டிருந்தார். சுற்றுப்பகுதி மக்களுக்கு வேண்டியவற்றைச் செய்வதில் அதிகாரிகளின் ஒத்துழைப்பைப் பெற்றுத்தந்தார்.

புகழுடம்பு

பாரதி கண்ட கனவான எல்லோருக்கும் கல்வி, காமராசரின் ஏழைகளுக்குக் கல்வி கட்டாயம் என்கிற செயல்பாடுகள், காந்தியடிகளின் கிராம வளர்ச்சித்திட்டம் போன்ற நோக்கங்கள் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அதற்கெனத் தன் செல்வங்களை வாரி வழங்கிட்ட அருளாளர் கொங்கு நாட்டுக் காந்தி மற்றும் காமராசரின் அன்புத் தம்பி என உள்ளன்போடு அனைவராலும் போற்றி வணங்கப்பட்ட ஐயா 16-08-1970 ஆம் நாளன்று பூத உடல் நீத்துப் புகழுடம்பு எய்தினார்.

அண்ணல் புகழ் இப்புவியுள்ள மட்டும் நிலைத்து நிற்கும்! அவரை வணங்கி அவர்காட்டிய வழியில் அவர் ஆற்றிய பணிகளைச் செப்பமுறச் செய்தும், அனைத்துப் பிரிவு மக்களும் எல்லா வளங்களையும் பெற்று ஏற்றம் பெற்றிட அவர் அடிச்சுவட்டைப் பின்பற்றுவோம்.

         வாழ்க அய்யாவின் புகழ்!!!
         வளர்க!!! தொடர்க அய்யாவின் பணி!!!

நன்றி: திரு.ந.பழனிசாமி, தலைவர், கே.வி.கே.நற்பணி மன்றம்,

புஞ்சை புளியம்பட்டி.